இறந்தவரின் நன்மைக்காக அவரது வாரிசுகள் சாதாரண அல்லது நிலையான தர்மத்தைச் செய்தால் அதன் நன்மை இறந்தவரைச் சேரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1388, 2760
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’ என அவர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2756, 2762, 2770
‘என் தந்தை வஸிய்யத் ஏதும் செய்யாமல் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அது வஸிய்யத்துக்குப் பகரமாக அமையுமா?’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3081
‘அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)
நூல்: நஸயீ 3604, 3606
பள்ளிவாசல் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல், கிணறு குளம் வெட்டுதல் போன்ற நிலையான தர்மங்களை இறந்தவர்களின் நன்மைக்காகச் செய்தால் அந்த நன்மை அவர்களைச் சேரும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.