உமர் (ரலி)ஒருநாள் இரவு.
ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) தமது உதவியாளர் அஸ்லத்துடன் மதீனாவுக்கு வெளியே நகர்வலம் சென்று கொண்டிருந்தார்கள். நகர்புறத்துக்கு அப்பாலுள்ள குக்கிராம மக்களின் உண்மைநிலை அறியும் பயணம் அது.தொலைவில் ஓரிடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. “யாரோ வழிப்போக்கர்களாக இருப்பார்கள் போலும், அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள்!” – என்றார்கள் உமர் அவர்கள்.அங்கே ஒரு பெண்மணி அடுப்புக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றியும் குழந்தைகள்.அடுப்பில் ஏதோ கொதித்துக் கொண்டிருந்தது.வெகுநேரமாகியும் அந்தப் பெண் அடுப்பிலிருந்துபாத்திரத்தை இறக்குவதாயில்லை!
வியப்புடன் அவளை நெருங்கிய ஜனாதிபதி உமர் அவர்கள் ‘முகமன் – சலாம்’ கூறினார்கள். அந்தப் பெண்ணை நலம் விசாரித்தார்கள். ‘அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?’- என்பதைக் கேட்டார்கள். “அய்யா, ஜனாதிபதியிடம் நிதி உதவி பெற்று வரலாம்! என்று நாங்கள் தலைநகர் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த கும்மிருட்டும்,கடுங்குளிரும் எங்கள் பயணத்தை தடுத்துவிட்டன!””அது சரி.. குழந்தைகள்.. அழுது கொண்டிருக்கிறார்களே!””இவர்கள் பசியோடு இருக்கிறார்கள்!””அந்தப் பாத்திரத்தில் வெந்து கொண்டிருப்பதை குழந்தைகளுக்குத் தரலாமே?””தரலாம்தான்! ஆனால், வெறும் தண்ணீரைத் தந்தால் குழந்தைகளின் பசியாறுமா?”-என்று பரிதாபமாக சொன்னவள் தொடர்ந்தாள்.”…ஆமாம் அடுப்பில் வெறும் தண்ணீர்தான் கொதித்துக் கொண்டிருக்கிறது!
நான் ஏதோ சமைத்துத் தருவதாக நினைத்துக் கொண்டு இந்தக் குழந்தைகள் அழுகையை நிறுத்தியுள்ளார்கள். கொஞ்ச நேரத்தில் அந்த நினைப்புடனேயே தூங்கியும் விடுவார்கள். எல்லாம் என் விதி!இறைவன் எனக்கும்.. அந்த உமருக்கும் இடையில் தீர்ப்பு வழங்கும் நாள் வரத்தான் போகிறது!” – என்று தனது வறுமையின் கொடுமையை வார்த்தைகளாக்கி கொட்டித் தீர்த்தாள் அந்த ஏழைத் தாய்!
ஆட்சியாளர் தனது வறுமை நிலையைக் கண்டுகொள்ளவில்லை. பொதுநிதியகத்திலிருந்து நிதி உதவி செய்யவில்லை என்பதைத்தான் அந்தப் பெண்மணி அப்படி வேதனையுடன் வெளிப்படுத்தினார்.அதிர்ந்துபோன ஜனாதிபதி உமர் அவர்கள் தயங்கித் தயங்கிக் கேட்டார்கள்:”அம்மா! உமருக்கு உங்கள் நிலைமை எப்படி தெரியும்?”தன் முன் நிற்பவர் யார் என்பதைத் தெரியாமலேயே அந்தப் பெண் விருட்டென்று சொன்னாள்:
“குடிமக்களின் வாழ்க்கை நிலைமையை தெரிந்துகொள்ள முடியாத ஒருவர் ஏன் ஜனாதிபதி பொறுப்பு வகிக்க வேண்டும்?”இந்தக் கேள்வி ஜனாதிபதி உமர் அவர்களை அதிர்ச்சியின் எல்லைக்குக் கொண்டு சென்றது. நெஞ்சில் மறுமையைக் குறித்த பேரச்சத்தை உருவாக்கியது. அருகிலிருந்த உதவியாளர் அஸ்லத்திடம், “வாருங்கள் போகலாம்!”- என்று மெல்லிய குரலில் சொன்னவர், அங்கிருந்து புறப்பட்டார்.நேரே சென்று பைத்துல்மால் எனப்படும் பொதுநிதியத்திலிருந்து ஒரு மூட்டை மாவையும், சிறிதளவு கொழுப்பையும் ஜனாதிபதி உமர் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அவற்றை முதுகில் சுமந்துகொண்டார்கள்.
“ஜனாதிபதி அவர்களே! எங்களின் தலைவரே! அந்த மூட்டையை இப்படி கொடுங்கள்! நான் சுமந்து வருகின்றேன்!” – என்றார் உதவியாளர் அஸ்லம் பதற்றத்துடன்.”வேண்டாம்!”- என்று கனத்த இதயத்துடன் சொன்ன ஜனாதிபதி உமர் அவர்கள் கண்ணீர் திரையிடச் சொன்னார்கள்: “நாளை மறுமையில், என் பாவச்சுமைகளை உம்மால் சுமக்க முடியுமா அஸ்லம்?”அந்தச் சுமையை சுமந்துகொண்டு பெண்மணி இருந்த இடத்துக்கு சென்றார்கள். மூட்டையை அந்த ஏழைத்தாயின் அருகில் வைத்தார்கள். அடுப்பை மூட்டினார்கள். உணவு சமைக்க உதவி செய்தார்கள். நெருப்பு அணையாமல் ஊதி.. ஊதி.. எரிய வைத்தார்கள். கடுங்குளிரில் கனமான புகை ஜனாதிபதி உமர் அவர்களின் (இறையருள் பொழிவதாக!) தாடிக்குள் நுழைந்து வெளியேறியது.பிறகு அந்தப் பெண்ணிடம் பாத்திரம் வாங்கிய ஜனாதிபதி உமர் அவர்கள் சமைக்கப்பட்ட ரொட்டிகளை அவளுக்கும், குழந்தைகளுக்கும் பறிமாறினார்கள். சூடான அந்த ரொட்டியை உண்ண சிரமப்பட்ட குழந்தைகளின் வசதிக்காக சிறு சிறு துண்டுகளாக பிட்டுப் பிட்டு ஊட்டினார்கள். ஏழைப் பெண்மணியும், அவளது குழந்தைகளும் பசியாறும்வரை பொறுமையுடன் பார்த்திருந்தார்கள். அதன்பின் புறப்பட்டார்கள். புறப்படும்போது அந்தப் பெண்மணி இப்படி சொன்னாள்:
“அய்யா! இறைவன் உங்கள் மீது நல்லருள் பொழிவானாக! தற்போதிருக்கும்ஜனாதிபதியைவிட நீங்கள்தான் அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர்!”சற்று தொலைவு சென்றபின் அவர்கள் தூங்கும்வரை மறைந்திருந்து கண்காணித்த ஜனாதிபதி உமர் அவர்கள் தமது உதவியாளரிடம் இப்படி சொன்னார்கள்:”அஸ்லம்! அவர்கள் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறார்கள் பாருங்கள்! இதற்கு நீங்களே சாட்சி! ஆஹா..!! நானும் இந்தக் காட்சியை கண்ணாரக் காண்கின்றேன்!”